செய்தியாளர் - தினேஷ்
ஹைதராபாத்தை சேர்ந்தவர் விஷ்ணுவர்தன் ரெட்டி. ஜொமேட்டோ ஊழியரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கிரெடிட் கார்டு நிறுவனத்தில் இருந்து வருவது போல் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதனை உண்மை என்று நம்பிய விஷ்ணுவர்தன் ரெட்டி அதில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது பேசிய கேமரூன் நாட்டை சேர்ந்த கொம்பி பிராங்க் செட்ரிக், மாலத்தீவை சேர்ந்த கொய்ட்டா சொங்கோலா, ரோலக்ஸ், டேவிட், ஜோசப் ஆகியோர் விஷ்ணுவர்தன் ரெட்டி தனியார் ஓட்டல் ஒன்றிற்கு நேரில் வருமாறு அழைத்துள்ளனர். இதையடுத்து விஷ்ணுவர்தன் ரெட்டி அங்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் 500 ரூபாய் நோட்டுக்களை ஏதோ ஒரு திரவத்தில் கழுவிக் கொண்டிருந்துள்ளனர். இது என்னவென்று விஷ்ணுவர்தன் ரெட்டி கேட்டுள்ளார். அதற்கு, கள்ள நோட்டுகளை இந்த திரவத்தில் கழுவினால் ஒரிஜினல் நோட்டாக மாறிவிடும் என்று அவர்கள் கூறி நம்ப வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து “5 லட்சம் ரூபாய் கொடுத்தால் 25 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டு ரூபாய்களை கொடுக்கிறோம். கூடவே அந்த கள்ள நோட்டை கழுவி ஒரிஜினல் நோட்டாக மாற்றத் தேவையான ரசாயனமும் கொடுப்போம்” என்று விஷ்ணுவர்தன் ரெட்டியிடம் கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய விஷ்ணுவர்தன் ரெட்டி 5 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்து, 25 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் ரசாயனம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த விஷ்ணுவர்தன் ரெட்டி அவர்கள் சொன்னது போல் செய்து பார்த்துள்ளார். அப்போது கள்ள நோட்டு கள்ள நோட்டாகவே இருந்துள்ளது. இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், உடனடியாக மல்காஜ்கிரி போலீசருக்கு தகவல் அளித்துள்ளார். புகாரின் பேரில், மல்காஜ்கிரி போலீசார் விரைந்து சென்று ஓட்டல் அறையில் சோதனை நடத்தியதோடு அங்கிருந்த கேமரூன் நாட்டை சேர்ந்த கொம்பி பிராங்க் செட்ரிக், மாலத்தீவை சேர்ந்த கொய்ட்டா சொங்கோலா ஆகிய இருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள ரோலக்ஸ், டேவிட், ஜோசப் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.