குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 4 பேருக்கு 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கொரோனாவுடன் போராடி வருகின்றன. தினம் தினம் பாதிப்புகள், உயிரிழப்புகள், குணமடைதல் என கொரோனா பரபரப்பாக உள்ளது. பெரிய நகரங்கள் முதல் கிராமங்கள் வரை கொரோனா பரவியுள்ளது. தொற்றக் கூடிய நோய் என்பதால் இதனைக் கட்டுப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாதங்கள் ஓட ஓட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் முற்றிலும் மறைந்துவிடவில்லை.
இதற்கிடையே தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம் என்றாலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 4 பேருக்கு 4மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. 3 மருத்துவர்கள் ஒரு குடும்பதலைவி என நான்கு பேருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத் கேன்சர் மருத்துவமனையைச் சேர்ந்த 33 வயதுடைய 2 ஆண் மருத்துவர்கள், எல்ஜி மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு பெண் (26)மருத்துவருக்கும், ஒரு பெண்(60) ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
3 மருத்துவர்களும் மருத்துவமனையில் இருப்பதால் மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், பெண்மணிக்கு மீண்டும் எப்படி கொரோனா வந்தது, சமீபத்தில் அவர் வெளியூர் பயணம் மேற்கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.