பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி நடைப்பெற்ற கொழுந்துவிட்டு எரியும் மகர சங்கராந்தி விழாவில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே உற்சாகம்தான். தமிழகத்தில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் பல வடிவங்களில் கொண்டாப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பல காரணங்கள் இருப்பினும், இப்பண்டிகைக்காகவே நடத்தப்படும் போட்டிகளுக்கு தனிச் சிறப்பே உண்டு. அதன்படி நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு. இதில் மாடுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு போட்டி. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள்கூடி நின்று, மடக்கிப்பிடித்து அதன் திமில் மீதேறி குறிப்பிட்ட தூரம் சென்று காளைகளை அடக்குவர். அப்படி காளையை அடக்கும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அதுபோல மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டத்திலும் மாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டத்தில், தீக்குள் மாடுகளை ஓடவிடும் நிகழ்ச்சி நடைபெறும். காளைகளை அலங்கரித்து, மாலை அணிவித்து அவற்றை நெருப்புக்குள் ஓட விடுவதன் மூலம் மாடுகளுக்கு நோய்நொடிகள் வராது என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் ஆரோக்கியமாகவும், விவசாயம் செழித்து வளரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். இந்தப் பண்டிகை ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்படுகின்றது.
இந்நிலையில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மைசூர் அருகே சித்தலிங்கபுராவில் தீக்குள் மாடுகளை ஓடவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீ மூட்டப்பட்ட நெருப்புக்குள் 4 பேர் சிக்கினர். உடனே வெளியேற முடியாமல் தவித்த அவர்கள் படுகாயம் அடைந்தனர். உடல் கருகிய நிலையில் மைசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.