புதுச்சேரியில் பெண் நடத்தி வந்த மதுபானக் கடை மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மதுபானக் கடையை மூடி சீல் வைத்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தை அடுத்துள்ள கீழவாஞ்சூர் பகுதியில் மதுபானக் கடை லெட்சுமி பார் உள்ளது. இதன் உரிமையாளர் ராமு கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த கடையை ராமுவின் தொழில் பாட்னரான சிவகாளிமுத்து என்பவர் நடத்தி வந்தார். அதன்பிறகு தற்போது அந்த கடையை புதுச்சேரியை சேர்ந்த எழிலரசி என்பவர் நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் எழிலரசிக்கும், ராமுவின் தொழில் பார்ட்னர் சிவகாளிமுத்து மற்றும் ராமுவின் மகன்கள் மாகேஸ்ராமு, ஆஜேஸ்ராமு ஆகியோருக்கும் இடையே கடை தொடர்பாக தொடர்ந்து பிரச்னை இருந்து வந்துள்ளது. இதில் கடை யாருக்கு சொந்தம் என்பதில் ஒருவருக்கொருவர் பிரச்னையை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி புகாரும் அளித்துள்ளனர்.
இந் நிலையில் இந்த கடை விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை உருவாகக்கூடும் என திருப்பட்டினம் காவல்நிலைய போலீசார் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். இதையடுத்து பிரச்னைக்குரிய இந்த மதுபானக் கடை யாருக்கு உரிமையானது என்பது ஆவணங்கள் வாயிலாக தெரியும் வரை மதுக்கடைக்கு தற்காலிகமாக சீல்வைக்க துணை ஆட்சியர் ஆதர்ஸ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மதுபானக் கடையை மூடி சீல் வைத்துள்ளனர்.
புதுச்சேரியின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.சி. சிவகுமார் கடந்த 2018ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புதுச்சேரியின் எழிலரசி நடத்திவந்த மதுபானக் கடையை மூடி சீல் வைத்திருப்பது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.