கர்நாடக மாநிலம், சிக்மகளூர் பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் மின்வேலிகளில் சிக்கி ஒரே மாதத்தில் நான்கு யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனவுயிர் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சாமுண்டிஸ்வரி மின் விநியோகக் கழகம் மற்றும் மங்களூர் மின் விநியோகக் கழக எல்லைகளில் உள்ள மின் விநியோகப் பகுதிகளில் யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே சட்டத்திற்குப் புறம்பான மின் இணைப்புகளைத் தடை செய்தால் மட்டுமே யானைகளின் தேவையற்ற மரணங்களைத் தடுக்கமுடியும் என வனப் பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்புப் படம்
கடந்த ஒரு மாதத்தில் தக்சின கன்னட பகுதியைச் சேர்ந்த சிக்மகளூரு கடூர் மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பண்ணைகளில் உள்ள மின்வேலிகளால் யானைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக சட்டத்திற்குப் புறம்பான முறையில் மின்வேலி அமைத்திருந்த கடூர் பகுதி விவசாயி ஒருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் மின்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் விவசாயிகள் மின்வேலிகளை அமைத்துவருகின்றனர். தனியார் விவசாய நிலங்களில் மின்சாரம் தாக்கி இறப்பது ஒருபக்கம் நடந்தாலும், வனப்பகுதிக்குள் பழங்களையும் மரப்பட்டைகளையும் சாப்பிடச் சென்ற யானைகள் உயிரிழந்த சம்பவங்களும் இருக்கின்றன.
அதாவது, 2008 முதல் 100க்கும் அதிகமான யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயரச் சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, அவ்வப்போது வனப்பகுதிகளில் மின்சார விநியோகத்தை பரிசோதனை செய்யவேண்டும் என இயற்கை தன்னார்வலர் வினோத் கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.