சாலையோர ஐஸ்கிரீம் ஸ்டாலில் பி.எம்.டபிள்யூ கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் நால்வருக்கு காயம் ஏற்பட்டது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை சேர்ந்த ரோஷனி அரோரா என்பவர் டெல்லியில் பேஷன் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவர் ஓட்டிவந்த நீலநிற பி.எம்.டபிள்யூ கார் ஐஸ்கிரீம் ஸ்டாலில் மோதியதில் அங்கே நின்றிருந்தவர்ள் சிலர் சாலையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு கைலாஷ் சப்னா சினிமா அருகே நடந்த இச்சம்பவம் தொடர்பாக அமர் காலனியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல் துணை ஆய்வாளர் கிரிஷன் பால் அனுப்பப்பட்டார். அவர் சென்றபோது. ஐஸ்கிரீம் ஸ்டாலை சேதப்படுத்தியபடி பி.எம்.டபிள்யூ கார் ஒன்று நின்றிருந்ததாகவும் விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர் என்று உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
விபத்தில் சாந்த் நகரில் வசிக்கும் முகேஷ் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. சபானாகுமாரிக்கு வலது முழங்காலில் சிராய்ப்பும், ஐஸ்கிரீம் விற்பனையாளர் குடுவுக்கு இடது முழங்காலில் சிராய்ப்பும், ஹர்ஷித் கவுர் என்பவருக்கு இடது கணுக்காலில் காயமும் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இதுதொடர்பாக முகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காரை கைப்பற்றி விசாரணை செய்தனர். ரோஷினி ஆரோராவும் கைது செய்யப்பட்டார். விபத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மதுபோதையில் வாகனத்தை ஒட்டினாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. இறுதியில் இது குடிபோதையில் நடந்;த விபத்து அல்ல என சோதனையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.