உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி முதல் ஆளுநர் பதவி ராஜினாமா வரை... ஃபாத்திமா பீவி கடந்து வந்த பாதை!

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி 96 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
பாத்திமா பீவி
பாத்திமா பீவிpt web
Published on

1927 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கேரளாவில் பிறந்தவர் ஃபாத்திமா பீவி. பத்தினம்திட்டாவில் உள்ள கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பட்டப்படிப்பை முடித்த பீவி, தந்தை கொடுத்த உத்வேகத்தின் அடிப்படையில் சட்டப்படிப்பை முடித்து 1950-ஆம் ஆண்டு பார் கவுன்சில் தேர்வெழுதினார். தேர்வில் தங்கப்பதக்கமும் பெற்றார். இதன் மூலம் பார் கவுன்சில் தேர்வில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்தார் ஃபாத்திமா பீவி. கேரளாவில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சாதனையையும் படைத்தார் பீவி.

1950-ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி முதல் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட பீவி தனது பணியைத் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து முன்சீஃப் நீதிபதி, துணை நீதிபதி, தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட், மவட்ட அமர்வு நீதிபதி என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அதேபோல் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராகவும் பீவி பணியாற்றியுள்ளார்.

1983-ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 1989-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற வரலாற்றைப் படைத்தார் பீவி. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி, ஆசியாவிலேயே ஒரு நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட ஒரு பெண் நீதிபதி என்ற பல்வேறு வரலாற்றையும் ஒருங்கே படைத்தார் ஃபாத்திமா.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஃபாத்திமா அதன்பிறகு தமிழக ஆளுநராக 1997-ஆம் ஆண்டில் நியமினம் செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் 1999-ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ஆளுநர் ஃபாத்திமா பீவிக்கு கருணை மனுக்களை அனுப்பி இருந்தனர். ஆனால் அக்டோபர் 29 ஆம் தேதி இந்த மனுக்களை ஆளுநரான ஃபாத்திமா பீவி தள்ளுபடி செய்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து நால்வரும் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

2000-ஆம் ஆண்டில் டான்சி நிலபேரம் தொடர்பன இரண்டு வழக்குகளில் ஜெயலலிதாவிற்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 மற்றும் 2 ஆண்டுகள் என சிறைத்தண்டனை விதித்தது. 2001-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்களை, தண்டனை காரணமாக அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். ஆனாலும், தேர்தல் முடிவில் அதிமுக பெரும்பான்மையான இடங்களை வென்றிருந்தது. அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஆட்சி அமைக்கும் உரிமையை ஆளுநரிடன் கோரினார் ஜெயலலிதா. ஆளுநரும் அனுமதி அளிக்கவே பற்றிக்கொண்டது விவாதம்.

பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றமும் ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என அறிவித்தது.

அடுத்ததாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை கைது செய்தது தொடர்பாக ஆளுநர் பீவியை திரும்பப் பெற வேண்டும் என குரலும் ஒலிக்கத் தொடங்கின. அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த டி.ஆர். பாலு, முரசொலி மாறன் ஆகியோரின் கைதுகள் காரணமாக இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளானது. அதிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நடத்தப்பட்ட விதம் நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளானது.

இந்த சூழலில் அரசியலமைப்பை நிலைநிறுத்த தவறியதன் காரணமாக ஆளுநரை திரும்பப்பெற மத்திய அமைச்சரவை நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் சில மணி நேரங்களில் ஃபாத்திமா பீவியே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை அப்போதைய குடியரசுத் தலைவட் கே.ஆர். நாராயணனுக்கும் அனுப்பி வைத்தார். இதனை அடுத்து ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த சி.ரங்கராஜன் தமிழகத்தின் கூடுதல் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

2002-ஆம் ஆண்டில் இந்திய குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி ஏ.பி.ஜே. அப்துல்கலாமை முன்மொழிந்த சூழலில் இடதுசாரிக் கட்சிகள் ஃபாத்திமா பீவியை முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

தனது வாழ்நாளில் பல்வேறு சாதனைகளையும் வரலாறுகளையும் ஒருங்கே படைத்த ஆளுநர் ஃபாத்திமா பீவி பல்வேறு விமர்சனங்களையும் சந்த்தித்தவர். எது எப்படி இருந்தாலும் ஆண்களால் சூழப்பட்டிருந்த நீதித்துறையில் பெண்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com