உச்சநீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி எம்.ஒய். இக்பால் (70) உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்தவர் முகமது ஈசுப் இக்பால். இவர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1975 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞர் ஆனார். 1996 ஆ ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பீகார் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் மாநிலம் உருவானதையடுத்து 2000ம் ஆண்டு ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2010 ஜூன் 11 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார் இக்பால். பின்பு உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2012ஆம் ஆண்டு டிசம்பர் 24ல் நியமிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 12ல் ஓய்வுபெற்றார்.
நீதிபதி எம்.ஒய்.இக்பால் இருந்த அமர்வு அளித்த தீர்ப்புகள்:
2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழக அரசு அமல்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு முரணாக 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்ட சட்டத்திருத்தத்தின் 3-ம் பிரிவு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
தமிழக சட்டமன்றத்தை திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடத்திலிருந்து, புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்து சட்டப்படி, மனைவிக்கு கணவன் ஒதுக்கும் சொத்துக்களை, பரிபூரணமாக அனுபவிக்கும் உரிமை, மனைவிக்கு உள்ளது என்றும், விதவையின் சொத்துக்கு வாரிசுகள் உரிமை கோர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள், ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை பெற்றவர்களை ஜாமீனில் விடுவிக்கும்போது, அரசு தரப்பின் கருத்தை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தும் கேரள அரசு பேரவையில் நிறைவேற்றிய தனிச்சட்டம் செல்லாது எனவும், சட்டவிரோதமானது எனவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.
டெல்லியில் பணியாற்றும் அதிகாரிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யப்படும்போது, அங்கு அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி நிலையங்களில் இடமளிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
சாட்சிகளை கலைக்க கூடும் என கூறி ஊழல் தடுப்பு சட்ட வழக்கில், ஆந்திர முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சேர்க்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
பாலியல் தாக்குதல் மற்றும் வன்கொடுமையின்போது மாற்று திறனாளிகள் ஆக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
பொதுத்துறை வங்கிகள் குறித்து விவரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கும்போது அதை வெளியிட வேண்டுமென ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
அரசு பணியாளர் தேர்வாணையங்களும் தகவலறியும் உரிமை சட்டத்திற்கு உட்பட்டதுதான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.