புதுச்சேரி காங்கிரஸ் அரசின் அமைச்சராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை பணியாற்றியவர் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம். அண்மையில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அவர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். டெல்லியில் நடந்த இணைப்பு விழாவில் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த தீப்பாய்ந்தானும் பாஜகவில் இணைந்தார்.
“புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன்” என அக்கட்சியில் இணைந்த பிறகு தெரிவித்திருந்தார் நமச்சிவாயம். புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அவர் சொல்லியிருந்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டாவை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
நமச்சிவாயம் பாஜகவில் இணைந்துள்ளது புதுச்சேரி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பம், பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி என பல்வேறு விவாதங்களுக்கு இந்த இணைப்பு வழிவகை செய்துள்ளது.