ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியவரும் அதன் முன்னாள் தலைவருமான லலித் மோடி, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின்போது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம் புகுந்தார். அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன. லலித் மோடி சில மாதங்களுக்கு முன்னதாக, நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் 24 மணிநேரமும் பிராணவாயு சிகிச்சை எடுத்து கொள்கிறேன் என்றும் லலித் மோடி இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். 2 வாரங்களில் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் ஆழ்ந்த நிம்மோனியா பாதிப்பும் காணப்படுகிறது என அவர் தெரிவித்து உள்ளார். 3 வாரங்களில் அவர் மெக்சிகோ நாட்டிலும், பின்னர் இங்கிலாந்தின் லண்டன் நகரிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்காக 2 மருத்துவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்து கொண்டார். அவர்கள் உதவியுடன், தனது மகனின் ஆதரவுடன் லண்டனுக்கு விமானம் வழியே கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.