விண்வெளியில் செயற்கைகோள்களை அழிக்கும் திறன் இந்தியாவிடம் 2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலேயே உள்ளதை அப்போதையை டிஆர்டிஓ சரஸ்வத் தெரிவித்து இருந்தார்.
விண்வெளியில் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக நிகழ்த்தி இருக்கிறது. ‘மிஷன் சக்தி’என்ற இந்தச் சோதனை முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டது. 300 கி மீட்டர் தொலைவில் சென்று தாக்கக் கூடிய இந்தச் சோதனைக்கு எல்.இ.ஓ. என்று பெயர். அதாவது ‘லோ எர்த் ஆர்பிட்’என்பது இதன் விரிவாக்கம். இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் இதனை அறிவித்தார்.
இந்நிலையில், விண்வெளியில் இந்தியா ஆற்றியுள்ள இந்தச் சாதனைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மிஷன் சக்தியின் வெற்றிக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, நேரு ஆட்சி காலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மாற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ அமைக்கப்பட்டதையும், இஸ்ரோ அமைப்பு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, விண்வெளியில் செயற்கைகோள்களை அழிக்கும் திறன் இந்தியாவிடம் 2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலேயே உள்ளதை அப்போதையை டிஆர்டிஓ சரஸ்வத் தெரிவித்து இருந்தார். 5000 கிலோமீட்டர் தூரம் வரை கண்டம் விட்டு கண்டு பாய்ந்து தாக்கும் அக்னி5 ஏவுகணை சோதனையை 2012இல் டிஆர்டிஓ செய்திருந்தது. ‘அக்னி 5’ சோதனைக்கு பின்னர் சரஸ்வத் அளித்த பேட்டியினையும் பலரும் இப்போது பதிவிட்டு வருகின்றனர்.
அன்றைய பேட்டியில் சரஸ்வத், “ ஒரு ஏ-சாட் ஆயுதத்திற்கு 800 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று தாக்கும் திறன் தேவைப்படும். அக்னி-5 அத்தகைய திறனை வழங்கும். இந்தக் ‘தாக்கும் வாகனம்’ அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது, தரையிலிருந்து செயற்கைக்கோளை குறிவைத்து தாக்கலாம்” என்று கூறியிருந்தார். அத்துடன், முக்கியமான ஒரு தகவலையும் அவர் அப்போது கூறியிருந்தார். அதவது, “இத்தகைய ஏ-சாட் எனும் செயற்கைக்கோள் தாக்கி அழிக்கும் திட்டத்திற்கு அப்போதைய மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. விண்வெளியை ஆயுதமயமாக்க இந்தியா விரும்பவில்லை. நமக்குள்ள திறனை பற்றி மட்டும் பேசுகிறோம். தற்போதைய செயற்கைக்கோள் அழிப்பு திட்டம் ஏதும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மிஷன் சக்தி வெற்றியடைந்ததற்கு பின்னர் பேசிய முன்னாள் டிஆர்டிஓ தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான விகே.சரஸ்வத், “இன்றைக்கு எதிர்க்கும் ராணுவ வல்லமை உங்களுக்கு வேண்டும் என விரும்பினால், அதாவது எதிரி நாடுகள் விண்வெளியை ராணுவ களமாக்க விரும்பினால், அதனை சமாளிக்கும் தொழில்நுட்ப சக்தி இந்தியாவிடம் பரிபூரணமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.