இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷூமன் கெய்க்வாட். கிரிக்கெட்டில் வீரராக ஓய்வு பெற்றாலும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக, தேசிய அணியின் தேர்வாளராக தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார்.
அன்ஷூமன் கெய்க்வாட் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 1982 - 1983 ஆம் ஆண்டுகளில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும் அடித்துள்ளார். 15 ஒருநாள் போட்டிகளில் 269 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடைய 22 வருட கிரிக்கெட் வீரர் வாழ்வில் 205 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 34 சதங்கள், 47 அரைசதங்கள் உட்பட மொத்தமாக 12136 ரன்களை குவித்துள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ள கெய்க்வாட், மிடில் ஆர்டரில் நம்பகமான பேட்டராக இருந்துள்ளார்.
வீரராக ஓய்வு பெற்றபின், 1997 முதல் 1999 மற்றும் 1999 முதல் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இரண்டு முறை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2000 ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டாம் இடம் பிடித்தது. அதுமட்டுமின்றி, இவரது தலைமையின் கீழ் விளையாடிய போதுதான், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் பெற்றார்.
அதுமட்டுமின்றி, 1990களில் தேசிய தேர்வாளராகவும் அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில், பிசிசிஐயால் Col. C. K. Nayudu வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். கெய்க்வாட் தனது நிதிப் பிரச்சனையை சந்தீப் பாட்டிலீடம் தெரிவித்திருந்த நிலையில், பாட்டீல் அதனை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தினார்.
இதன் பின்னர், கெய்க்வாட்டின் சிகிச்சைக்காக பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி அளித்தது. அதுமட்டுமின்றி 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களும் நிதியுதவி வழங்கியுள்ளனர். அந்த அணியின் கேப்டன் கபில்தேவின் தொடர் முயற்சியால் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் அவரது சிகிச்சை இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. வதோதராவில் அவருக்கு சிகிச்சைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மறைவினை ஒட்டி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிரதமர் மோடி போன்றோர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷா தனது எக்ஸ் தளத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியும் அன்ஷூமன் கெய்க்வாட் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “அன்ஷூமன் கெய்க்வாட் கிரிக்கெட்டில் தனது பங்களிப்பிற்காக நினைவு கூரப்படுவார். அவர் திறைமையான வீரர் மற்றும் பயிற்சியாளர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.