அமெரிக்கா உட்பட குறைந்தது 41 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் சர்ச்சைக்குரிய தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது.
தெற்கு டெல்லியில் "மார்கஸ் நிஜாமுதீன்" என்ற 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது மக்கள் அதிகம் நிறைந்த ஒரு நெரிசலான பகுதியாகும். இங்கு கடந்த மாதம் நடைபெற்ற மதக் கூட்டத்தில் வெளிநாட்டினர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அச்செய்தி நாடு முழுவதும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது. வெளிநாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் மூலம் இந்த நோய்த் தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனவே நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கட்டிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட இதன் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 9,000 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆபத்தில் உள்ளனர் என்று அதிகாரிகள் நம்பி வருகின்றனர். இந்தப் புகார் எழுந்தவுடன் இதன் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி என்பவர் தலைமறைவானார். அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அவர் இரண்டு ஆடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய கள ஆய்வின் படி, அமெரிக்கா உட்பட குறைந்தது 41 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் சர்ச்சைக்குரிய தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. மேலும் விசா நிபந்தனைகளை மீறி தலைநகரின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தலைமையகத்தில் இவர்கள் பங்கேற்றதும் கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுலா விசாக்களில் இந்தியாவுக்கு வந்த அவர்கள் இந்த மத நிகழ்வில் கலந்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பாஸ்போர்ட்டை பட்டியலிட்டுள்ள அதிகாரிகள் வருங்காலத்தில் இவர்கள் இந்தியாவுக்குப் பயணிக்க முடியாதபடி, பாஸ்போர்டை ரத்து செய்வதற்காக வேண்டி ப்ளாக் லிஸ்டில் சேர்த்துள்ளதாகவும் இந்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ப்ளாக் லிஸ்டில் ஏறக்குறைய 960 வெளிநாட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் இந்தோனேசியா (379), பங்களாதேஷ் (110), கிர்கிஸ்தான் (77), மியான்மர் (63) மற்றும் தாய்லாந்து (65) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கள ஆய்வின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஜிபூட்டி மற்றும் வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ வரை இதில் பங்கேற்ற பலர் தடை செய்யப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "சுற்றுலா விசாக்கள் மூலம் இந்திய நிகழ்வில் 960 வெளிநாட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்" எனக் கூறியிருந்தது. தப்லீக் ஜமாஅத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக ப்ளாக் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்