இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
கொழும்பில் நடந்த இந்த சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்து பசில் ராஜபக்சவுடன் விவாதித்ததாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் குறித்தும் பேசப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், நட்புறவில் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற வெளியுறவுக் கொள்கையை இந்தியா தொடர்ந்து பின்பற்றும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இப்பயணத்தின்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரையும் ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். தமிழர் கட்சிகளின் தலைவர்களையும் ஜெய்சங்கர் சந்திப்பார் என்று தெரிகிறது.
இலங்கையில் பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா, தாய்லாந்து, நேபாளம், மியன்மார் உள்ளிட்ட 7 நாடுகளின் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி முறையில் உரையாற்ற உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்றுள்ளார்.
இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள், பால், எண்ணெய், எரிபொருள் போன்றவற்றின் விலை மிக மிக கடுமையாக உயர்ந்துள்ளது.