தனது வாழ்வின் பெரும் பகுதியை மரங்களுக்காக ஒதுக்கி கிராமத்திற்கே, உயர்தர ஆக்சிஜனை வழங்கிய ஒரு இயற்கை ஆர்வலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? யார் அவர்? வாருங்கள் பார்க்கலாம்.
பஞ்சாப் மாநிலம் பட்டியலா மாவட்டத்தில் உள்ள தப்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை ஆர்வலர் ஹர்தயல் சிங் (Hardayal (67). பஞ்சாப் சாலை போக்குவரத்து நிறுவனத்தில் சுருக்கெழுத்தராக பணியாற்றிய சிங் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றது முதலே மரமும் கையுமாக அலைந்த சிங் கடந்த 12 வருடங்களாக 10,000 த்துக்கும் மேற்ப்பட்ட மரங்களை நட்டு அந்தக்கிராமத்தில் ஒரு சிறிய காட்டையே உருவாக்கி விட்டார். இதற்காக தினமும் தனது மிதிவண்டியில் மரங்கன்றுகளையும், அதற்கு தேவையான தண்ணீரையும் எடுத்துச் செல்வாராம்.
இப்படி இயற்கையை அணு அணுவாக ரசித்து கிராமத்திற்கே ஆக்சிஜனை அள்ளி அள்ளி தந்த ஒருவர், ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பிதான் ஆக வேண்டும். ஏனேன்றால் அவர் தற்போது நம்முடன் இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஹர்தயல் சிங்கிற்கு ஆக்சிஜன் கிடைக்க தாமதமானதால் அவர் கடந்த 25 ஆம் தேதி இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார்.
இது குறித்து அவரது மனைவி குல்விந்தர் கவுர் (54) கூறும் போது, “ எனது கணவர் மே 17 ஆம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கிராம மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் 28 மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னர் கூட அவருக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை.” என்றார்.
ஊர் தலைவர் கரண் வீர் சிங் கூறும் போது, “மே 19 ஆம் தேதி ஹர்தயல் சத்தீஸ்கரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடலின் ஆக்சிஜன் அளவு கடுமையாக குறைந்தது. அந்த மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கருவி இல்லாததால், இயல்பான ஆக்சிஜன் கருவி கொண்டே அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. அவர் தவித்ததை நாங்கள் கண் கூடாக பார்த்தோம். இறுதியாக 23 ஆம் தேதி வெண்டிலேட்டர் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால் அதனால் அந்த பயனும் இல்லை ஏற்கனவே தாமதமாகி விட்டது. அவர் 25 ஆம் தேதி சிகிச்சை பலன்றி உயிரிழந்து விட்டார்.” என்றார்.
தொடர்ந்து அவரது மனைவி கூறும் போது, “ எனது கணவர் மனித இனத்தின் சுவாசக்காற்றிற்காக நிறைய மரங்களை நட்டு, சுத்தமான ஆக்சிஜன் காற்றை வழங்க வழி வகுத்தார். ஆனால் அந்தக் கடவுள் அவருக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் செய்து விட்டார். அவருக்கு மரங்கள் வளர்ப்பது என்றால் அவ்வளவு இஷ்டம். அவருக்கு முழங்கால் பிரச்னை இருந்த போதினும் கூட அவர் சைக்கிளில் தண்ணீர் பிடித்து மரங்களுக்கு ஊற்றுவார். நான் ஒருமுறை அவரிடம், இருசக்கரவாகனத்தையாவது எடுத்துச்செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் அவரோ அது காற்றுமாசுபாட்டை ஏற்படுத்தும் என்று சைக்கிளிலேயே தனது சேவையை தொடர்ந்தார். அவர் உருவாக்கிய மருந்துகளையே அவர் மரங்களுக்கு தெளிப்பார்.
அவருக்கு மூச்சுப் பிரச்னை ஏற்பட்ட உடன் அவரை எனது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்க்க முயன்றனர். ஆனால் அங்கு அவருக்கு படுக்கை கிடைக்கவில்லை. அதனைத்தொடர்ந்து அவர் வீட்டுக்கு திருப்பி கொண்டுவரப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே யாரிடமும் சொல்லாமல், நகரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அவர் சென்றார். ஆனால் அங்கும் அவருக்கு படுக்கை கிடைக்கவில்லை. அதன் பின்னர்தான் ஊர் தலைவர் 28 மணி நேர காத்திருப்பிற்கு பின்னர் சத்தீஸ்கரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலி படுக்கை இருப்பதை கண்டறிந்தார்” என்றார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரயில்வே துறை, கிராமத்தின் வழியாக செல்லும் ரயில் பாதைக்கு மின் நிலையம் அமைக்க முடிவெடுத்தது. மின்நிலையத்தை சுற்றி வேலி அமைப்பதற்காக அங்கிருந்த ஒரு மரத்தை வெட்ட முடிவெடுத்தது. ஆனால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து ஓராண்டாக போராடி, பிரதமர் உட்பட அதிகாரிகள் பலருக்கும் கடிதம் எழுதி அந்த மரத்தைக் காப்பாற்றினார்.
இப்படி மரங்களுக்காக தனது வாழ்வின் பெரும் பகுதியை ஒதுக்கி நேசித்து வந்த ஹர்தியால் சிங்கின் உடல் அவர் வளர்த்த காட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது. தந்தையின் தன்னிகரில்லா சேவையை, அவரது இரட்டை மகன்களான தமன் ப்ரீத் சிங் மற்றும் தில்ப்ரீத் சிங் தொடர போவதாக தெரிவித்துள்ளானர்.
தகவல் மற்றும் புகைப்பட உதவி: For years this Punjab man planted trees so village could breathe. Then, his lungs gave way to Covid