இன்றைய நவீன உலகத்தில் உணவுப் பொருள்களை உணவகத்தின் வாசலை மிதிக்காமல் வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளும் வசதியை அடைந்திருக்கிறோம். இந்த வசதியை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்க, நாள்தோறும் ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுடைய வாழ்க்கை என்பது போராட்டமாகவே இருக்கிறது.
ஆர்டர் செய்த உணவை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கில் வேகமாகச் செல்கின்றனர். வாடிக்கையாளர்களில் சிலர் உணவு டெலிவரி செய்பவர்களை தாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கு நடைபெற்று வருவதை செய்திகளில் காண முடிகிறது. மேலும், டெலிவரியின்போது தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடமிருந்து தப்பிப்பதற்காக பயந்து ஓடி காயம் அடைந்த கதைகளும் உண்டு. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உணவகங்களில் பணிபுரிபவர்கள் டெலிவரி நபர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பதாகவும் நீண்ட நேரம் காக்கவைப்பதாகவும் செய்திகளும் உலவுகின்றன.
இந்த நிலையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் பரிதாப நிலை குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், தன்னுடைய ட்விட்டர் பகிர்ந்திருக்கும் வீடியோ பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐ.எ.ஏஸ். அதிகாரியான அவனேஷ் சரண் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் ப்ளாஸ்டிக் பையில் இருந்து உணவை எடுத்துச் சாப்பிடுகிறார். சுற்றிலும் வீடுகள் உள்ள அந்தப் பகுதியில், ஓரிடத்தில் உட்கார்ந்துகூட சாப்பிட நேரமில்லாமல் நின்றபடி, அடுத்த டெலிவரி ஆர்டரைப் பிடிக்கும் நோக்கில் சாப்பிடுகிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
20 வினாடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோ பதிவு, தற்போது வரை 190 k பார்வையாளர்களையும் 9.8k லைக்குகளையும் பெற்றுள்ளது. வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் அதன்கீழ் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ’அவர்களுக்கு நிம்மதியாக சாப்பிடக்கூட நேரம் கிடைக்காமல் இருப்பது வேதனைக்குரியது’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், ’எனது வீட்டுக்கு டெலிவரி செய்ய ஊழியர்கள் வரும்போது, அப்போது என்னிடம் என்ன உள்ளதோ, அது பழம், பிஸ்கெட், பால், சர்பத் என எதையாவது ஒன்றைக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். அவர்களது சிரிப்பு விலைமதிப்பற்றது’ எனப் பதிவிட்டுள்ளார்.