மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவி வருகிறது. இதனைப் போக்க மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில சலுகைகளை அறிவித்தார். அத்துடன் வரும் வாரங்களில் சில முக்கிய சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது, பொதுதுறை வங்கிகள் சிலவற்றை இணைக்கும் அறிவிப்பை அவர் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய 10 பொதுதுறை வங்கிகளின் தலைவர்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது.
பஞ்சாப் நேஷனல் பாங்க், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, யுனைடெட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.