நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய சாதனையை படைக்க உள்ளார். 18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இதில் 2019ம் ஆண்டு முதல் நாட்டின் முழு நேர நிதியமைச்சராக இருந்து வரும் நிர்மலா சீதாராமனே மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம்
தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த அமைச்சர் என்ற மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிக்கிறார் நிர்மலா சீதாராமன்.
ஆம், மறைந்த முன்னாள் பிரதமர் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சி காலங்களில் நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் 6 பட்ஜெட்டுகளை தொடர்ச்சியாக தாக்கல் செய்துள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2019ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து முழு பட்ஜெட்டுகளையும், நடப்பு ஆண்டு பிப்ரவரியில் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 2024 - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் புதிய சாதனையை படைக்க இருக்கிறார்.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றாலும், மக்களவைத் தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கூட்டத்தொடரில் பேசிய நிர்மலா சீதாராமன், “தேர்தலில் வென்று மீண்டும் நாங்களே முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதுபோலவேதான் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய இருக்கிறார் அவர்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக நேருவின் அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சராக இருந்த ஆர்.கே சண்முகம். அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர்கள் வரிசையில், 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய் முதலிடத்தில் இருக்கிறார்.
அடுத்ததாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 2வது இடத்தில் ப.சிதம்பரமும், 8 முறை தாக்கல் செய்து மூன்றாவது இடத்தில் பிரணாப் முகர்ஜியும் இருக்கின்றனர். இதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-கும் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் தாக்கலின்போது இதுவரையிலும் மிக நீளமான உரை என்றால் அது 2020ம் ஆண்டு 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நிர்மலா சீதாரமன் ஆற்றிய உரை என்றே சொல்ல முடியும். மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால் இந்த பட்ஜெட்டில் மாநில வளர்ச்சிகளுக்கு ஏற்றபடி பல அம்சங்கள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.