தெலங்கானாவில் எரிவாயு சிலிண்டரில் அதன் விலையுடன் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டி ஆளும் கட்சியினர் பதில் கொடுத்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஜஹீராபத் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் திடீர் ஆய்வு நடத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாதை கண்டு மாவட்ட ஆட்சியரை கடிந்துக்கொண்டார். மத்திய அரசு அதிக மானியம் கொடுக்கும்போது, நியாயவிலைக் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன் என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். தேசிய அளவில் விவாதப்பொருளாக இது மாறியது.
இந்த நிலையில், சிலிண்டர்களில் அதன் விலையுடன் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டி, ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர். தெலங்கானாவில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மீது “மோடிஜி ரூ.1105” என்று எழுதப்பட்ட போஸ்டரை ஒட்டி மோடி சிரிப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் அதில் இடம்பெறச் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன் பகிர்ந்து, “பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள், இங்கே இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாதது குறித்து மாவட்ட ஆட்சியரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியது வெட்கக்கேடானது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாத பட்சத்தில் பொது விநியோகத் துறை அமைச்சருக்கு தெரிவித்து இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.