கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. கனமழையால், மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை வேகமாக நிரம்பியது.
கடல் மட்டத்திலிருந்து 2,403அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 2,398அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணை திறக்கப்பட்டுள்ளது. கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் அணையைத் திறந்து வைத்தனர்.
ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீரைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணையின் நீர் சென்றடையும் செறுதோணி, வாழைத்தோப்பு, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பின் இடுக்கி அணை தற்போது திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையின் வரலாற்றிலேயே நான்காவது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.