பணம் செலுத்தி ஆர்டர் செய்த செல்போனை டெலிவரி செய்யாததால் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம்.
பெங்களூரு ராஜாஜி நகரில் வசித்துவரும் திவ்யஸ்ரீ என்பவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அன்று ரூ.12,499 மதிப்புள்ள ஒரு புதிய செல்போனை வாங்குவதற்காக ஃபிளிப்கார்டில் ஆர்டர் கொடுத்துள்ளார். இதற்கான முழு பணத்தையும் முன்கூட்டியே அவர் செலுத்திவிட்டார். திவ்யஸ்ரீ ஆர்டர் செய்திருந்த செல்போன் ஜனவரி 16ம் தேதி டெலிவரி செய்யப்படும் என அவருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பிளிப்கார்ட் குறிப்பிட்டிருந்த நாளில் அவருக்கு அந்த செல்போன் டெலிவரி செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து சரியான நேரத்தில் செல்போனை டெலிவரி செய்யாததால் நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு தாம் ஆளாகியாதக் கூறி பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் திவ்யஸ்ரீ புகார் அளித்தார். வாடிக்கையாளர் சேவை மையத்தை பலமுறை தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை எனவும் தனது புகாரில் திவ்யஸ்ரீ குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை விசாரித்துவந்த பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜாராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் ஃப்ளிப்கார்ட் தரப்பிலிருந்து யாரும் விசாரணைக்கு ஆஜாராகவில்லை.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது சேவையில் 'முழு அலட்சியம்' காட்டியது மட்டுமின்றி, நெறிமுறையற்ற நடைமுறைகளையும் பின்பற்றுகிறது என்று கூறியது. எனவே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 12 சதவீத வருடாந்திர வட்டியுடன் ரூ.12,499 பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும். அத்துடன் வாடிக்கையாளருக்கு இழப்பீடாக 20,000 ரூபாயும் அவரது வழக்குச் செலவுக்காக 10,000 ரூபாயும் செலுத்த வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.