ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹரியானா மாநிலத்தில், 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்தார். கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்றுள்ள தீயணைப்புப் படையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் அங்கே காவலுக்கு வரவழைக்கப்பட்டனர்.
ஆழ்துளைக் கிணற்றின் அருகே, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் மிகப்பெரிய பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பத்து நேரத்திற்கு மேலாக இந்தப் போராட்டம் தொடர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஏறக்குறைய 50 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுமிக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டும் வந்தது. சிறுமி மீட்கப்பட்டவுடன் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயாராக இருந்தனர்.
இந்நிலையில் சிறுமியை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மணப்பாறையை சேர்ந்த சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.