தீவிர சிகிச்சை பிரிவில் ஏர்கண்டிஷன் வேலை செய்ததால் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ளது கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. அரசு மருத்துவ மனையான இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் 4 குழந்தைகள் உட்பட 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த புதன்கிழமை முதல் இங்கு ஏ.சி வேலை செய்யவில்லை. கடும் வெயில் நிலவுவதால் ஏசி இல்லாமல் நோயாளிகளால் இருக்க முடியவில்லை. நோயா ளிகளின் உறவினர்கள் டேபிள் ஃபேன் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இதையடுத்து புதன்கிழமை முதல் நேற்று நள்ளிரவு வரை ஏசி இல்லாமல் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது. இரண்டு நோயாளிகள் மாரடைப்பு காரணமாகவும் இரண்டு நோயாளிகள் நாள்பட்ட நோய் காரணமாகவுமே உயிரிழந்தனர் என்றும் ஏசி இல்லாத காரணத்தால் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்ட மாஜிஸ்திரேட் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவை யான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.