கார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம்: ஜிஎஸ்டி குழு
கார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம் என்று ஜிஎஸ்டியின் ஃப்ட்மெண்ட் குழு (Fitment panel) பரிந்துரைத்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கார்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்தனர்.
இந்நிலையில் ஜிஎஸ்டியின் ஃப்ட்மெண்ட் குழு கார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளது. அதாவது ஏற்கெனவே இருக்கும் 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை இந்தக் குழு நிராகரித்துள்ளது. ஏனென்றால் இந்த வரி விகிதத்தை குறைத்தால் அரசிற்கு வரும் வரி வருவாய் குறைந்து விடும் சூழல் ஏற்படும். ஆகவே வரி விகிதத்தை குறைக்க வேண்டாம் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஜிஎஸ்டிக்கான ஃப்ட்மெண்ட் குழுவில் மத்திய மற்றும் மாநில வருவாய் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பல்வேறு துறைகளின் கோரிக்கைகளை ஆராய்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை அளிப்பார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.