இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையோன அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இப்போட்டியை காண பல்வேறு தரப்பு மக்களும் ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியுள்ளனர். இதனிடையே, இந்த போட்டிக்கான டிக்கெட்டை அதிகவிலைக்கு வாட்ஸ் அப் மூலம் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து மும்பை காவல்துறையினர் தனிப்படை அமைத்து நடத்திய அதிரடி சோதனையில், மலாடு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கோத்தாரி என்பவர் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரின் செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் 27 ஆயிரம் ரூபாய் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை டிக்கெட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் டிக்கெட்டுகளை எங்கிருந்து வாங்கியுள்ளார். இந்த மோசடியில் அவருடன் வேறு யாரும் தொடர்பில் உள்ளனரா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.