பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த 36 விமானங்களும் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
முதற்கட்டமாக 2020 மே இறுதியில் 5 ரஃபேல் போர் விமானங்கள் வரும் என முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக இந்தியாவுக்கு வருகின்றன. இந்த விமானங்கள் இன்று ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு வந்தடையும். மீதமுள்ள விமானங்கள் ஆகஸ்ட் மாதம் வர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 24 விமானிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரான்ஸ் விமானப் படையில் உள்ள ரஃபேல் விமானம் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். ரஃபேல் இந்தியாவுக்கு வரும் நேரத்தில் காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் ஏர்காமோடர் ஹிலால் அகமது ரதார். அதிநவீன ரஃபேல் விமானத்தை ஓட்டிய முதல் இந்திய விமானி இவராவார். பள்ளிப்படிப்புக்கு பிறகு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்ற இவர், 1988ம் ஆண்டு இந்திய விமானப்படையில் ஃபிளைட் லெப்டினெண்டாக சேர்ந்தார். 2019ல் ஏர் கமோடராக பதவி வகித்தார்.
ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர் எனக் கூறப்படுகிறது. இந்திய சூழலுக்கு ஏற்ப விமானத்தில் மாற்றங்களை செய்யவும், ஆயுதங்கள் பொருத்தப்படுவதற்கான தொழில்நுட்பத்திலும் இவர் டசால்ட் நிறுவனத்திற்கு உதவியாக இருந்தார் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவிற்கு விமானங்கள் வழியனுப்பி வைக்கப்பட்ட அன்று இந்தியதூதருடன் ஹிலால் அகமது ரதாரும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.