ஊழலை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டச் சட்டம்தான் லோக்பால். இதனை 2013ஆம் ஆண்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதன்பின்னர் ஜனவரி 1ஆம் தேதி 2014 முதல் இச்சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்தது. ஆனால் நீண்ட வருடங்களாக லோக்பால் அமைப்பில் மத்திய அரசு முன்னைப்பு காட்டவில்லை. இது தொடர்பாக உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு லோக்பால் அமைப்பு உருவாக்குவதற்கான கால கெடுவை விதித்தது.
இதனையடுத்து இச்சட்டம் அமலுக்கு வந்து 6ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு லோக்பால் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் முதல் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அவரின் பின்புலம் குறித்து விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
யார் இந்த பினாகி சந்திரகோஷ்?
பழைய கல்கத்தா மாநிலத்தில் 1952ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி பிறந்தார் பினாகி சந்திரகோஷ். இவரது குடும்பத்தில் பலர் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களாக உள்ளனர். இவரின் தந்தை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். பினாகி பட்டப்படிப்பை முடித்து 1976ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். அதன்பின்னர் 1997ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். இங்குப் பணியாற்றி வந்த இவர் பிறகு ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்படி 2012ஆம் ஆண்டு ஹைதராபாத் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதனையடுத்து 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கிட்டத்தட்ட உச்சநீதிமன்ற நீதிபதியாக 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் பினாகி சந்திரகோஷ். இவர் 2017ஆம் ஆண்டு மே மாதம் 27 தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்?
பினாகி சந்திரகோஷ் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய போது 190 தீர்ப்புகள் மற்றும் ஆணைகளை பிறப்பித்துள்ளார். அத்துடன் 85 தீர்ப்புகளை தன் கைப்பட எழுதியுள்ளார். இவற்றில் முக்கியமாவை:
இதுவரை இவர் உச்சநீதிமன்றத்தில் 104 குற்ற வழக்களுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். அத்துடன் 72 சிவில் வழக்களில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அத்துடன் மூன்று முறை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில்தான் தற்போது லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக 66 வயதாகும் பினாகி சந்திரகோஷ் பதவியேற்றுள்ளார். இவரின் பதவி காலம் மே 28 2022 (70 வயது) வரையுள்ளது குறிப்பிடத்தக்கது.