தலைநகர் டெல்லியில் தடையை மீறி பல இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மோசமடைந்தது.
டெல்லியில் பட்டாசு வெடிக்க மாநில அரசும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தடை விதித்துள்ளன. இருப்பினும் தீபாவளி தினமான இன்று பல இடங்களில் தடையை மீறி பட்டாசு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பட்டாசு விற்பனை செய்ததாக 41 பேரையும், வெடித்ததாக 6 பேரையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டி இருக்கிறது. காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் இயந்திரங்கள் மூலம் உயர் கட்டடங்கள் மற்றும் மரங்களில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.