கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு துறைகளில் வேலை இழப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஒரு பக்கம் உயிரிழப்புகள் மறுபக்கம் பொருளாதார பாதிப்பு என மனித இனத்தை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இந்தப் பாதிப்புகள் இந்தியாவில் மட்டுமில்லை உலகம் முழுவதுமே இதுதான் நிலை.
பல தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வருவாய் இழப்பு என்ற காரணத்தின் காரணமாக பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் பல்வேறு நிறுவனங்களில் இருந்து வெளியேறிய ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்காக பல்வேறு வேலைகளை செய்து இயன்ற வரை வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், மும்பையில் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகவும் கால்பந்து பயிற்சியாளராகவும் இருந்த பிரதாச் போசலே என்பவர் இப்போது காய்கறி விற்று வருகிறார்.
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில் "நான் ஒரு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். கொரோனா பாதிப்பு மற்றும் பொது முடக்கம் காரணமாக நான் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டேன். இப்போது என்னுடைய வருமானத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன்" என கூறியுள்ளார்.
இதேபோல், வேலையிழந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் மாற்றும் தொழிலை வாழ்க்கையை நகர்த்துவதற்காக செய்யத் தொடங்கியுள்ளனர்.