மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் மகர்தா சாலையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சூழ்நிலையால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. இந்தூர் மற்றும் போபாலில் இருந்து தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. சில உள்ளூர் ஊடகங்கள் 11 பேர் உயிரிழப்பு என்றும் சொல்கிறது. கள தகவல் இன்னும் முழுமையாக கிடைக்காமல் உள்ளது. பலரது நிலையே தெரியாததால் மீட்புப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குழப்பத்திற்கு மத்தியில் தீ விபத்தால் அருகில் இருக்கும் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் பொருட்டு மருத்துவமனையிலும் கூட்ட நெரிசல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
மறுபுறம், ஹர்தாவில் நடந்த இந்த சம்பவத்தை கவனித்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். மேலும் அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர், உதய் பிரதாப் சிங், ஏசிஎஸ் அஜித் கேசரி, டிஜி ஹோம் கார்டு அரவிந்த் குமார் ஆகியோரை ஹெலிகாப்டரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்படும்படி உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர்.
காயமடைந்தவர்கள் விமானம் மூலம் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் இந்தூர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட இருக்கின்றனர். மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசுத்தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஹர்தா மாவட்ட கலெக்டர் ரிஷி கர்க் ஊடகங்களுக்கு பேசுகையில், “பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சுமார் 20-25 பேரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணி நடந்து வருகிறது.
அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள் குழுக்கள், மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் NDRF குழுக்களையும் வரவழைத்துள்ளோம். மீட்புப் பணிக்காக 19 SDRF வீரர்கள் பேரிடர் பொருட்களுடன் அனுப்பப்பட்டுள்ளனர். வீரர்களுடன், தீயணைப்பு கருவிகள், தீயணைப்பு கருவிகள், தீயணைப்பு வாகனங்கள், சர்ச் லைட், ஸ்ட்ரெச்சர், ஹெல்மெட், சுவாசக் கருவிகள் ஆகியவை பயணியர் பேருந்து மற்றும் மீட்பு வாகனம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன” என்றுள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கிறார்.