பாஜக பற்றி பொய் செய்தி வெளியிட்டதா The Wire ? - அமித் மால்வியாவின் புகாரும் நடவடிக்கையும்!

பாஜக பற்றி பொய் செய்தி வெளியிட்டதா The Wire ? - அமித் மால்வியாவின் புகாரும் நடவடிக்கையும்!
பாஜக பற்றி பொய் செய்தி வெளியிட்டதா The Wire ? - அமித் மால்வியாவின் புகாரும் நடவடிக்கையும்!
Published on

தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகச் சொல்லி பா.ஜ.க.வின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியின் தேசியத் தலைவர் அமித் மால்வியா அளித்த புகாரின் பேரில் The Wire மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

“பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தோ அதன் கட்சித் தலைவர்கள் குறித்தோ சமூக வலைதளங்களில் எவரேனும் விமர்சித்து பதிவிடும் போஸ்ட்டுகளை பாஜகவின் நிர்வாகி அமித் மால்வியா ரிப்போர்ட் செய்தால் அந்த பதிவுகள் எந்த கேள்விகளுக்கும் உட்படுத்தப்படாமல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தால் நீக்கப்பட்டுவிடுகிறது” என The Wire இணையதளம் மேற்கொண்ட ஆய்வில்
தெரிய வந்துள்ளதாக கடந்த அக்டோபர் 10ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ஏனெனில், பாஜகவின் நிர்வாகியான அமித் மால்வியாவுக்கு X-Check என்ற அதிகாரம் meta நிறுவனத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதன் மூலம் ரிவியூ இல்லாமல் பாஜகவுக்கும் அதன் அரசுக்கும் எதிராக பதிவிடப்படும் போஸ்ட்களை ரிப்போர்ட் செய்யும் அம்சம் அமித் மால்வியாவுக்கு இருக்கிறதாம்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தனக்கு மெட்டா நிறுவனம் சிறப்பு அதிகாரம் கொடுத்திருப்பதாகச் சொல்லி தி வயர் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனக் குறிப்பிட்டு பாஜகவின் நிர்வாகி அமித் மால்வியா டெல்லி சிறப்பு குற்றப்பிரிவு காவல் ஆணையரிடத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

அமித் மால்வியாவின் புகாரில், “தி வயர் நிறுவனம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் போலி ஆவணங்களை தயாரித்து செய்தி வெளியிட்டிருக்கிறது. தி வயரின் நிறுவன ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், சித்தார்த் பாட்டியா, எம்.கே.வேணு மற்றும் துணை ஆசிரியர் ஜாஹ்னவி சென் ஆகியோர் மீது "ஏமாற்றுவது, மோசடி செய்வது, நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது" ஆகிய குற்றங்களுக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த அக்டோபர் 6ம் தேதி இன்ஸ்டாகிராமில் Cringearchivist என்ற பெயரில் இருக்கும் கணக்கில் இருந்த பதிவை அமித் மால்வியா ரிப்போர்ட் செய்ததை அடுத்து மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த பதிவை நீக்கியிருக்கிறது. இதனையடுத்துதான் தி வயர் ஆய்வு மேற்கொண்டு செய்தி வெளியிட்டதால் பரபரப்பு தொற்றியிருக்கிறது.

அதன்படி தி வயர் செய்தியின் நம்பகதன்மை குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில், “இந்த செய்தித் தொகுப்பு மெட்டாவில் இருக்கும் எங்களுக்கு தெரிந்த வட்டாரத்திடம் இருந்து தகவல் கிடைத்தது” என தி வயரின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் தெரிவித்திருந்தார்.

ஆனால் மெட்டா நிறுவன தகவல்தொடர்பு தலைவர் Andy Stone கடந்த அக்டோபர் 11ம் தேதி, “தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது முற்றிலும் புனையப்பட்டது” எனக் கூறியுள்ளார். இதன் பிறகு தி வயர் இணையதளத்தில் பதிவிடப்பட்ட செய்தித் தொகுப்பை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோடு அந்த நிறுவனம் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com