புதுச்சேரி ராஜ்யசாபா தேர்தலில் பாஜக சார்பில் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் போட்டி?

புதுச்சேரி ராஜ்யசாபா தேர்தலில் பாஜக சார்பில் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் போட்டி?
புதுச்சேரி ராஜ்யசாபா தேர்தலில் பாஜக சார்பில் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் போட்டி?
Published on

புதுச்சேரி ராஜ்யசாபா தேர்தலில் பாஜவின் சார்பில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியான நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியை ஐசரி கணேஷ் இன்று நேரில் சந்தித்தார்.

புதுச்சேரி ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் 22ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை புதுச்சேரியில் யார் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்படாமல் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர் ரங்கசாமி தலைமை ஆட்சியில் உள்ளதால் பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் இடையே யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக பாஜக இந்த பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறது. ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி தேர்தல் நேரத்தில் தன் கட்சிக்கு பக்கபலமாக இருந்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு வாய்ப்பு வழங்க உறுதியாக இருக்கிறார் என்று அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பாஜக மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் பாஜக போட்டியிட உள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி அந்த கடிதத்தை நேற்று முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வழங்கினர். மேலும் பாஜக சார்பில் பிரபல சினிமா தயாரிப்பாளரும் வேல்ஸ் குழும நிறுவனருமான ஐசரி கணேஷ் போட்டியிடவுள்ளதாக பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியுடன் ஐசரி கணேஷ் திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் நேரில் சந்தித்துப் பேசினார்.

ஐசரி கணேஷ் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தபோது அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை என்றும், மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எதுவாக இருந்தாலும் வழக்கமாக மவுனம் காக்கும் ரங்கசாமி வாய்திறந்து சொன்னால் மட்டுமே தேர்தலில் போட்டியிடப்போவது யார் என்பது முடிவாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com