பண்டிகைகளை கருத்தில் கொண்டு வரும் 20ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 392 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
பண்டிகைக் காலத்தின்போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் கொல்கத்தா, பாட்னா, வாரணாசி, லக்னோ ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துர்கா பூஜை, தசரா, தீபாவளி மற்றும் சாத் பூஜை ஆகியவற்றில் பங்கேற்கச் செல்வோரின் வசதிக்காக இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை நவம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் இதற்கும் பொருந்தும் எனவும் ரயில்வே வாரியம் கூறியிருக்கின்றது.