டெல்லியில் நீடிக்கும் விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பக்கபலமாக இருக்கிறார்கள் எண்ணற்ற பெண்கள். ”நாங்கள் விவசாயிகளின் மகள்கள். இந்தப் போரட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியது எங்கள் கடமை” என்கிறார்கள் இவர்கள்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. இத்தனை நாட்களாக எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதி வழியில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
இதற்கு முக்கியக் காரணம் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள். நாங்கள் விவசாயிகளின் மகள்கள் என பெண்கள் எழுப்பும் கோஷம், சில சமயங்களில் சோர்ந்துபோகும் ஆண்களையும் தட்டி எழுப்புவதாக உள்ளது.
சமைப்பதற்கு காய்கறிகளை வெட்டுவது, உணவு சமைப்பது, அதை பரிமாறுவது, பதாகைகளை தூக்கிக்கொண்டு கோஷங்களை எழுப்புவது, மேடைகளில் பேசுவது என போராட்டக்களத்தில் துடிப்புடன் வலம் வருகிறார்கள் பெண்கள்.
‘’இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது எங்களது ஒரே கோரிக்கை. அதில் வெற்றி பெறும்வரை நாங்கள் இங்கிருந்து நகரப் போவதில்லை அது வருடக்கணக்கில் ஆனாலும் எங்களுக்கு பிரச்சினையில்லை’’ என்கிறார் 54 வயதாகும் சுகிரிப்த் என்கிற பெண்மணி.
விவசாயம் செய்துதான் தனது மகனை படிக்க வைத்திருப்பதாகவும் தற்பொழுது தன் மகன் நியூசிலாந்தில் வேலை பார்த்து வருவதாகவும் கூறுகிறார். ஆயினும் விவசாயத்தைக் காக்க போராட்டக் களம் கண்டுள்ளதாக கூறுகிறார் இவர்.
லூதியானாவைச் சேர்ந்த 53 வயதான மந்தீப் கவுர் கூறுகையில், ‘’விவசாயத் தொழில் பாலினத்தால் வரையறுக்கப்படவில்லை. இந்த சட்டத்தால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஆண்கள் கவலையடைந்திருக்கிறார்கள். பல ஆண் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் ஏன் வீட்டில் உட்கார வேண்டும்? அவர்களுக்கு பக்கபலமாக விளைநிலத்தில் மட்டுமல்ல, போராட்டக்களத்திலும் நிற்போம்’’ என்கிறார் அவர்.
"என்னால் இரவில் சரியாக தூங்க முடியவில்லை. என் சகோதரனும் மருமகனும் எங்கள் விவசாய சகோதரர்களும் இங்கு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது என்னால் வீட்டில் உட்கார முடியவில்லை. நான் இங்கு வந்த பிறகு எனக்கு முதல் நல்ல இரவு தூக்கம் வந்தது, என்கிறார் சுக்விந்தர் என்கிற பெண்மணி.
போராட்டத்தில் நிறைய பெண்கள் கைக்குழந்தையுடனும் தள்ளாத வயதிலும் பங்கேற்றுள்ளதை காண முடிகிறது. களம் கடினமானதாக இருந்தாலும் அதிவிட உறுதியானதாக இருக்கிறது இப்பெண்களின் உள்ளம்.