பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள், மாட்டிறைச்சி தடை, தாய் மதம் திரும்புவதற்கான பிரச்சாரங்கள் ஆகியவை முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்றும் இதனால் அவர்கள் அசவுகரியத்தை உணர்ந்து வருகின்றனர் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.
பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக, மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த இறுதிப் பேட்டியில் இந்தக் கருத்துகளை முன் வைத்திருக்கிறார். இந்தியாவில் சகிப்பின்மை வளர்ந்து வருவதாக இதற்கு முன் பலர் தெரிவித்த கருத்துகளையும் அன்சாரி பகரிந்து கொண்டுள்ளார். பல நூற்றாண்டுகளாக நமது பன்முக சமூக அமைப்பு தொடர்ந்து வரும் நிலையில், திடீரென அதற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான சிந்தனைகளும் எழுந்திருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.