குஜராத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து அங்கு வாழும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வாழ பயப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது மாநிலத்திற்கு மீண்டும் படையெடுக்கின்றனர்.
குஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதேநாளில் கைது செய்யப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுமி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே குஜராத்தில் தங்கி வேலை பார்த்துவரும் வெளிமாநில தொழிலாளர்களை கும்பல் குறிவைத்து தாக்கி வருகிறது. சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் வெளிமாநில நபர் என்பதால் அதனை முன்வைத்தே அங்கு வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் பலரை கும்பல்கள் தாக்கி வருகிறது. மக்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என காங்கிரஸ், மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கேட்டுக்கொண்ட போதிலும் பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதனால் குஜராத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு பயப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் கடந்த சில நாட்களில் குஜராத்தை விட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கட்டுமான ஒப்பந்ததாரனான கிருஷ்ணசந்ரா ஷர்மா என்பவர் கூறும்போது, “ கடந்த 22 வருடங்களாக அகமதாபாத்தில் வசித்து வருகிறேன். இப்போது நடப்பது போன்று இதற்கு முன் நான் ஒருபோதும் பார்த்தே இல்லை. அதனால் சொந்த ஊருக்கே செல்கிறேன்” என கூறியுள்ளார். இதனிடையே மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா இதுகுறித்து கூறும்போது, “ இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தில் அவர்கள் மத்தியில் அதிக கோபம் நிலவுகிறது. 14 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட காரணத்தினால் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஒருநபர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த வெளிமாநில தொழிலாளர்களும் தவறானவர்கள் என குறிப்பிட முடியாது. இருந்தாலும் அந்த நபரின் குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசு மக்களை பாதுகாக்கவும், ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
(Courtesy : Indian Express)