இந்தியாவில் சீன நாட்டின் மொபைல் போன் அப்ளிகேஷன்களை தடைவிதித்ததை தொடர்ந்து பிரபல மல்டி பிளேயர் மொபைல் கேமான பப்ஜி விளையாட்டும் முடக்கப்பட்டது. அப்போது முதலே பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா என காத்துக்கிடந்த பப்ஜி பிரியர்களுக்கு தற்காலிக விமோச்சனமாக அறிமுகமாகி உள்ளது தான் FAU-G.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் nCore கேம்ஸ் என்ற நிறுவனம் இந்த FAU-G விளையாட்டை வடிவமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்ற காள்வான் பள்ளத்தாக்கு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று இந்த கேம் பொது பயன்பாட்டிற்கு ப்ளே ஸ்டோரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கேமை அதன் தூதுவரும், 2.0 படத்தில் பக்ஷி ராஜனாக நடித்த நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். இப்போதைக்கு ப்ளே ஸ்டோரில் இந்த கேமை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். ஆப்பிள் போன்களில் பயன்படுத்தும் வகையில் இது எப்போது அறிமுகமாகும் என்பது ரகசியமாக உள்ளது. இந்நிலையில் பப்ஜியின் இடத்தை இந்த கேம் நிரப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.