ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிவந்த தந்தை குறித்து அவரது மகனே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
டெல்லி ராஜோக்ரியை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் அங்குள்ள தனியார் வாகன நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை வீரேந்தர் (59). இவர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அபிஷேக், தந்தையிடம் பல முறை நிலைமையை எடுத்துக்கூறி வெளியே செல்லாதீர்கள் என எச்சரித்துள்ளார். ஆனால் அபிஷேக் சொல்வதையும் மீறி வீரேந்தர் தெருக்களில் தேவையில்லாமல் சுற்றி வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அபிஷேக், கடந்த ஏப்ரல் 1 ஆம்தேதி காவல்துறையினருக்கு தொலைப்பேசி வாயிலாக தந்தை குறித்து புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் அபிஷேக் வசிக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். போலீஸ் வருவதை கண்ட அபிஷேக் இப்போதாவது வீட்டிற்குள் வந்து விடுங்கள் என எச்சரித்துள்ளார். ஆனால் அப்போதும் வீரேந்தர் கேட்கவில்லை. இதனையடுத்து வீரேந்தரின் அருகில் வந்த காவல்துறையினர், இந்த நேரத்தில் வெளியே சுற்றுவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து எடுத்துக்கூறி அவரை வீட்டிற்குள் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் வீரேந்தர் கேட்பதாக இல்லை. இதனால் வேறு வழியில்லாமால் அபிஷேக் கேட்டுகொண்டதன்படி வீரேந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபிஷேக் கூறும் போது “ என்னுடைய தந்தை ஊரடங்கு உத்தரவை பின்பற்ற மறுக்கிறார். தினமும் வெளியே செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். நான் பல முறை எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்டபாடில்லை. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள்” என்று கூறினேன். முன்னதாக ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தவர்கள் 30 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.