14 வயது சிறுமியை சொந்த தந்தையே ரூ.4 லட்சத்துக்கு ராஜஸ்தான் நபரிடம் விற்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனை சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது பெற்றோர்கள் நவம்பர் மாதம் உதய்ப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு திருமணம் செய்துவைக்கப்போவதாக கூறியுள்ளனர். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் உதய்ப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்துவிட்டு பெற்றோர்கள் உஜ்ஜைனுக்கு திரும்பியிருக்கின்றனர்.
அதன்பிறகு டிசம்பர் 8-ம் தேதி அந்த சிறுமி தனது பெற்றோரை பார்க்க ஆசையாக இருக்கிறது என்று கூறி உஜ்ஜைனுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டிருக்கிறார். அந்த சிறுமியின் கணவனும் அவரை உஜ்ஜைனுக்கு கூட்டி வந்திருக்கிறார். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை உதய்ப்பூருக்கு தன்னுடன் வருமாறு அந்த சிறுமியின் கணவன் அழைத்தபோது உடன் செல்லமறுத்த சிறுமி, பெற்றோருக்குத் தெரியாமல் தனது உறவினர் அத்தையை அழைத்து, பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததையும், தனது கணவர் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதுடன், தனது தந்தை ரூ.4 லட்சத்திற்கு அவரிடம் தன்னை விற்றிருப்பதாகக் கூறியும் கதறி அழுதிருக்கிறார்.
சிறுமியின் அத்தை காவல்துறை மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்குக் கொடுத்த தகவலின்படி, போபாலிலிருந்து 190 கிமீ தொலைவிலுள்ள உஜ்ஜைனிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த போலீஸார், சிறுமியின் தந்தை உட்பட 4 பேரை கைதுசெய்து, பாலியல் நோக்கத்திற்காக சிறுமியை விற்ற குற்றத்திற்காகவும், கடத்திய குற்றத்திற்காகவும் போக்சோ மற்றும் இந்திய சட்டப் பிரிவுகள் 370ஏ, 376-ன் கீழ் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிக்கு தற்போது மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.