என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ

என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
Published on

ஃபாஸ்ட் டேக்கை (Fast Tag) ஸ்கேன் செய்து வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு சிறுவன் பணத்தை திருடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறைக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதே 'ஃபாஸ்ட் டேக்' நடைமுறை. இதன்படி, கார்களில் 'ஃபாஸ்ட் டேக்' பெயரில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். கார்கள் எப்போது சுங்கச்சாவடிகளை கடக்கிறதோ, அப்போது அந்த ஸ்டிக்கர்கல் ஸ்கேன் செய்யப்பட்டு தாமாகவே காரின் உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து உரிய கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். முதலில் விருப்பத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட 'ஃபாஸ்ட் டேக்' , கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்த முறையால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

வைரலாகும் வீடியோ

பொதுமக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்ற இந்த 'ஃபாஸ்ட் டேக்' முறையில் மோசடி நடைபெறுவதை போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ ஏதேனும் ஒரு வட மாநிலத்தில் எடுக்கப்பட்டதை போன்று இருக்கிறது. அதில், நெடுஞ்சாலையில் நிற்கும் ஒரு காரின் கண்ணாடியை அங்கிருக்கும் சிறுவன் துணியால் சுத்தம் செய்கிறான். இந்நிலையில், 'ஃபாஸ்ட் டேக்' ஸ்டிக்கர் அருகே சுத்தம் செய்யும் போது, அவன் கையில் கட்டப்பட்டிருக்கும் வாட்சின் முகப்பு, ஸ்டிக்கரின் மேற்புறத்தில் படுமாறு கையை வளைத்துக் கொள்கிறான். இதனை வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்த காரின் உரிமையாளர், "இப்போது ஒரு கும்பல் ஃபாஸ்ட் டேக்கை ஸ்மார்ட் வாட்சால் ஸ்கேன் செய்து அதன் மூலம் பணத்தை திருடி வருகிறது" எனக் கூறுகிறார். காருக்குள் இருந்து பேசுவதால் அந்த சிறுவனுக்கு இது கேட்கவில்லை.

பின்னர் அந்த சிறுவன் காரை துடைத்து முடித்ததும், அவனிடம் காரின் உரிமையாளர் நாசூக்காக பேச்சு கொடுக்கிறார். அப்போது அவனிடம், "கையில் என்ன வாட்ச் கட்டிருக்கிறாய்? ஸ்மார்ட் வாட்ச்சா?" என அவர் கேட்கிறார். அவர் அப்படி கேட்ட அடுத்த நொடியே, அந்த சிறுவன் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறான். அவனை காரின் உரிமையாளர் பிடிக்க துரத்துகிறார். ஆனால் பிடிக்க முடியவில்லை. இது அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவானது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் மக்களும் இந்த ஃபாஸ்ட் டேக் மோசடி குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கமெண்ட் செய்து வந்தனர்.

ஃபாஸ்ட் டேக் மோசடி சாத்தியமா?

இந்த சூழலில், ஃபாஸ்ட் டேக்கில் மோசடி நடைபெறுவது சாத்தியமில்லாத ஒன்று என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து 'ஃபாஸ்ட் டேக்' தயாரிப்பு நிறுவனமான பேடிஎம், ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறது. அதில், "ஃபாஸ்ட் டேக்கில் மோசடி நடைபெறுவதை போன்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில் சிறிதளவும் உண்மை கிடையாது. தேசிய எலக்ட்ரானிக் கட்டண வசூல் (NETC) விதிமுறைகளின் படி, அங்கீகாரம் பெற்ற வணிக நிறுவனத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். பலகட்ட சோதனைகளுக்கு பிறகே ஃபாஸ்ட் டேக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் பாதுகாப்பான சேவை ஆகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஒருங்கிணைக்கும் நிறுவனமான இந்திய தேசிய கட்டணம் செலுத்தும் கழகமும் (என்பிசிஐ) இந்த மோடி புகாரை மறுத்திருக்கிறது. இதுதொடர்பாக என்பிசிஐ ட்விட்டரில் சில விளக்கங்களை அளித்திருக்கிறது. அதன்படி முதலாவதாக, ஃபாஸ்ட் டேக் முறையில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை பொது இணையம் (ஓபன் இன்டர்நெட்) மூலமாக நடைபெறாது. இரண்டாவது, 'ஃபாஸ்ட் டேக்' ஸ்டிக்கரை ஸ்கேன் செய்யும் போது அதற்கான சில முன் அனுமதிகள் கோரப்படும். அதனை நிவர்த்தி செய்த பிறகே கட்டணம் எடுக்கப்படும். இதற்காக பிரத்யேக ஸ்கேனர்கள் சுங்கச்சாவடிகளில் இருக்கும். மற்ற ஸ்கேனர்களை கொண்டு இதனை செய்ய முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com