பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், பிரிஜ் பூஷன் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்தும் அவரை கைதுசெய்ய வலியுறுத்தியும் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். பிரபலங்கள், முதல்வர்கள் மட்டுமின்றி, விவசாய அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று பேட்டியளித்த, விவசாயிகளின் தலைவர் ராகேஷ் டிகாயிட், ”போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு விவசாயிகளின் முழு ஆதரவு உள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியதுடன், அவர்களுடைய போராட்டத்திலும் கலந்துகொண்டார். இந்த நிலையில் இன்று, விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போலீஸ் தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, வீராங்னைகள் கூறிய பாலியல் தொல்லை புகாா் குறித்து விசாரணை செய்ய கடந்த ஜனவரி மாதம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துவிட்டது. ஆனால் இதுவரை அறிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.