கண்ணீர் புகை குண்டு வீச்சு.. தண்ணீர் பாய்ச்சல்.. தள்ளுமுள்ளு.. தடைகளை உடைத்த விவசாயிகள் போராட்டம்!

“பாஜகவிற்கு இணையாகத்தான் காங்கிரஸ் கட்சியையும் கருதுகிறோம். நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை” என கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்pt web
Published on

மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இன்று திட்டமிட்டபடி டெல்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குவது தொடர்பாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லி நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் அண்மையில் அறிவித்தனர்.

சண்டிகரில் நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராய், பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பெரும்பாலான பிரச்சனைககளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும், மேலும் சிலவற்றை குழு அமைப்பதன் மூலம் தீர்க்க ஆலோசனை முன்மொழியப்பட்டதாகவும் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது என விவசாய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சர்வன் சிங் பாந்தர் இதுகுறித்து கூறுகையில், “எங்களது எந்த கோரிக்கைகளிலும் அரசாங்கம் தீவிரமாக இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்ற விரும்பவில்லை என நாங்கள் நினைக்கின்றோம். அரசாங்கம் எங்களுக்கு ஏதாவது ஒன்றை கூறியிருந்தால் நாங்கள் எங்களது போராட்டத்தை மறுபரிசீலனை செய்திருக்கலாம்” என தெரிவித்திருந்தார்.

டெல்லி சலோ பேரணியை ஒட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி போலீஷ் கமிஷ்னர் சஞ்சய் அரோரா மார்ச் 12 ஆம் தேதி வரை பெரிய கூட்டங்களுக்கு தடை விதித்து பேரணிகள், டிராக்டர்கள் நுழைவு மற்றும் ஆயுதங்கள் அல்லது எரியக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். டெல்லி சலோ அணிவகுப்பு இன்று காலை 10 மணிக்கு துவங்கியுள்ளது. பஞ்சாப்பின் கங்ரூரில் இருந்து 2500 டிராக்டர்களுடன் ஹரியானா வழியாக டெல்லி செல்கின்றனர்.

சர்வன் சிங் பாந்தர்
சர்வன் சிங் பாந்தர்

இந்நிலையில், பவானா ஸ்டேடியத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்திருந்த்து. டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் இதுகுறித்து கூறுகையில், “விவசாயிகளின் கோரிக்கைகள் உண்மையானவை. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசன உரிமை. எனவே விவசாயிகளைக் கைது செய்வது தவறானது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பஞ்சாப் - ஹரியானா ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். அணிவகுப்பு தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஷம்பு எல்லையை அடைந்தபோது, ஹரியானா காவல்துறை போராட்டக்காரர்கள் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசினர்.

இந்த அணிவகுப்பிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என கிசான் மஸ்தூர் மோர்ச்சா தெரிவித்துள்ளது. “காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. பாஜகவிற்கு இணையாகத்தான் காங்கிரஸ் கட்சியையும் கருதுகிறோம். நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை. நாங்கள் விவசாயிகளுக்காக குரல் எழுப்புகிறோம்” என பாந்தர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு தனது ஆதரவை காட்டியதால் பஞ்சாப் காவல்துறையும் போராட்டக்காரர்களை தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com