புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை மாலை சந்திக்கின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தவுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத்பவார் ஆகியோர் அடங்கிய குழு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை மாலை 5 மணிக்கு சந்திக்கிறது.
கொரோனா விதிமுறைகள் காரணமாக, ஐந்து பேருக்கு மட்டும் இந்தச் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த 5வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து 13 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.