ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு
ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு
Published on

ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 வேளாண் பண்ணை மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியதை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்தில், ஹரியானா மாநிலம் தேசிய நெடுஞ்சாலை 44 இல் உள்ள அம்பாலா மாவட்டத்திலுள்ள மொஹ்ரா கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. நவ்தீப்பின் தந்தை ஜெய் சிங் ஜல்பேரா மீதும் இதே எஃப்.ஐ.ஆரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது வேகமாக இருவரும் டிராக்டருடன் வந்து போலீஸ்காரர்கள் மீது ஏற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

'டெல்லி சாலோ' அணிவகுப்பின் போது விவசாயிகள் டெல்லிக்கு செல்வதைத் தடுக்க ஹரியானா போலீசார் அந்தப் பகுதிக்கு தடை விதித்திருந்தனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து விவசாயிகளைக் கட்டுப்படுத்த ஹரியானா காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தும் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது நவ்தீப்சிங் நீர் பீரங்கியில் ஏறி அதை அணைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. வீடியோவில், நவ்தீப் தண்ணீர் தெளிக்கும் பீரங்கியை அணைத்துவிட்டு பாதுகாப்பாக ஒரு டிராக்டர் மீது குதிப்பதைக் காணலாம்.

"படிப்புக்குப் பிறகு, எனது தந்தையுடன் விவசாயம் செய்யத் தொடங்கினேன். நான் ஒருபோதும் எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை, எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளின் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதால் அந்த குழாயை அணைக்க வேண்டும் என்ற தைரியம் கிடைத்தது. நாங்கள் அமைதியாக டெல்லிக்குச் செல்ல முயன்றோம், ஆனால் காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம். அரசாங்கத்திற்கு எதிராக கேள்வி எழுப்பவும், மக்கள் விரோதச் சட்டங்கள் ஏதேனும் இயற்றப்பட்டால் எதிர்ப்பதற்கும் எங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. நாங்கள் எங்கள் வழியிலுள்ள அனைத்து தடுப்புகளையும் உடைத்து டெல்லியை அடைந்தோம்” என்று நவ்தீப் கூறியுள்ளார், இவர் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் 2015 இல் பட்டம் பெற்றவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com