ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை அமைக்க சிறப்புக்குழு முதல்வர் ஜெகன் மோகனிடம் அறிக்கை அளித்துள்ளது.
ஆந்திராவின் தலைநகரமாக அமராவதியை உருவாக்கிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கனவு கண்டுவந்த நிலையில், ஆந்திராவில் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 3 தலைநகரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் ஜெகன் மோகன். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, 125 பக்க பரிந்துரை அறிக்கையை ஜெகன் மோகனிடம் தாக்கல் செய்துள்ளது. விசாகப்பட்டினம், அமராவதி மற்றும் கர்னூல் ஆகிய நகரங்களை மாநிலத் தலைநகரங்களாக உருவாக்கலாம் என சிறப்புக்குழு பரிந்துரைத்துள்ளது.
பொதுவாக ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் தலைமையிடமும் அமைந்திருக்கும் பகுதி தான், அந்த மாநிலத்தின் தலைநகரமாக இருக்கும். ஆனால், ஆந்திராவுக்கு 3 தலைநகரம் என்பதால், எந்தெந்த தலைமையிடம் எங்கெங்கு அமைய வேண்டும் என்பதையும் 6 பேர் கொண்ட சிறப்புக்குழு பரிந்துரை செய்திருக்கிறது.
துறைமுகம் அமைந்துள்ள விசாகப்பட்டினத்தை முதன்மையான நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டமன்றத் தலைநகராகவும், கர்னூலை நீதித்துறையின் தலைமை இடமாகவும் அமைக்க சிறப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, நிர்வாக தலைநகரமாக அமைய உள்ள விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், முதலமைச்சர் அலுவலகம், உயர்நீதிமன்றக் கிளையும் செயல்பட உள்ளது.
மேலும், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. அமராவதியில் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கான பேரவை வளாகமும், உயர்நீதிமன்றக் கிளை மற்றும் ஆளுநர் மாளிகையும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதித்துறை தலைநகரமாக அமைய உள்ள கர்னூலில் ஆந்திராவின் உயர்நீதிமன்றமும், மற்ற நீதிமன்றங்களும் அமையும் எனத் தெரிகிறது. ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை 4 மண்டலமாக பிரிக்கவும் சிறப்புக் குழு ஆலோசனை வழங்கியிருக்கின்றது.
ஆனால், 3 தலைநகரங்களை உருவாக்கும் திட்டத்திற்கு ஆந்திரா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமராவதியை பிரமாண்ட தலைநகரமாக்க தங்கள் நிலங்களை கொடுத்த விவசாயிகள், மீண்டும் நிலம் தங்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டாலும் எந்தவித பயனுமில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 3 தலைநகரங்களை உருவாக்க வரும் 27ஆம் தேதி அமைச்சரவை கூடி முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.