"பஞ்சாப்புக்கு வருகை புரிந்து புதிய வேளாண் சட்டங்கள் குறித்த தெளிவான விளக்கத்தை எங்களுக்கு கொடுத்து விட்டு செல்லுங்கள், பயணத்திற்கான மொத்த செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேம மாலினிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஹேமா மாலினி விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்திருந்த நிலையில் விவசாயிகள் இதை தெரிவித்துள்ளனர்.
“அவர்களுக்கு என்னதான் வேண்டும் என தெரியவில்லை. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் போராடுகின்றனர். எதிர் கட்சிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி செயல்படுவதை போலத் தெரிகிறது” என மதுரா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹேம மாலினி தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் இந்த அழைப்பு கடிதத்தை அவருக்கு அனுப்பியுள்ளனர். “உங்களது வார்த்தைகள் எங்களை ரொம்பவே காயப்படுத்தி விட்டன. சுமார் 100-க்கும் விவசாயிகள் போராட்ட களத்தில் உயிரிழந்துள்ளனர். எங்களது விளைச்சலுக்கு உரிய விலை கேட்பது தவறா. கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிகள், வியாபாரிகள் கேட்கின்ற கட்டுப்படியாகாத விலைக்கு பொருட்களை கொடுக்க வேண்டுமா? எங்களுக்கு எதுவும் தெரியாமல் போராடுகிறோம் என சொல்லி இருந்தீர்கள்.
தயவு செய்து பஞ்சாப்புக்கு வந்து புதிய வேளாண் சட்டங்கள் குறித்த தெளிவான விளக்கத்தை எங்களுக்கு கொடுத்து விட்டு செல்லுங்கள், பயணத்திற்கான மொத்த செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி கிசான் சங்கர்ஷ் விவசாய குழு இந்த கடிதத்தை ஹேம மாலினிக்கு அனுப்பியுள்ளது.