பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சமூக நீதிக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
உரையில், "பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலை சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு எனது பாராட்டுகள். புதிய கல்விக் கொள்கை, நாட்டில் பலன்களை தரத் தொடங்கியுள்ளது. விவசாயிகள் அன்னம் வழங்கும் கடவுள். பொருளாதார சீர்திருத்தங்களுக்கான புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் நிலை உயர்ந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.” என திரௌபதி முர்மு தமது உரையில் பெருமிதத்துடன் கூறினார்.