அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும், மனித உரிமைகளுக்கான உரிமைக்காகவும் கனடா துணை நிற்கும் என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்
டெல்வி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட கனட அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக இந்தியாவுக்கான கனட உயர் ஆணையருக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் கனட பிரதமர் ஜஸ்டின் மீண்டும் தன்னுடைய கருத்தை வலுவாக பதிவு செய்துள்ளார். " அமைதியாக போராட்டம் நடத்தும் இந்திய விவசாயிகளின் உரிமைகளுக்காக துணை நிற்பேன்" என்று தெரிவித்துள்ளார்
நேற்று புதுடெல்லிக்கான கனட தூதர் நாதிர் படேல், இந்திய வெளியுறவுத்துறையால் வரவழைக்கப்பட்டு, கனட பிரதமரின் இத்தகைய கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா சார்பில் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.
"இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கனட பிரதமர், சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் நமது உள் விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடு.இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் " என்று வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து பிரதமர் ட்ரூடோ தனது நிலைப்பாட்டை மீண்டும் தெரிவித்துள்ளார். ''அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும், மனித உரிமைகளுக்கான உரிமைக்காகவும் கனடா துணை நிற்கும். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்