'விவசாயிகளிடம் தவறான பிரச்சாரம்...' - ஏர்டெல், வோடோபோன் மீது ஜியோ கொடுத்த புகார்!

'விவசாயிகளிடம் தவறான பிரச்சாரம்...' - ஏர்டெல், வோடோபோன் மீது ஜியோ கொடுத்த புகார்!
'விவசாயிகளிடம் தவறான பிரச்சாரம்...' - ஏர்டெல், வோடோபோன் மீது ஜியோ கொடுத்த புகார்!
Published on

விவசாயிகளிடம் தங்கள் நிறுவனம் குறித்து தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்கள் மீது ரிலையன்ஸின் ஜியோ குற்றம் சுமத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸின் ஜியோ, தனது சக போட்டியாளர்களான ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் மீது டிராய் (TRAI) ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்தப் புகார் அமைந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை தவிர்த்து வருகின்றனர். இதை ஓர் இயக்கமாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்கும் செயல்களில் இறங்கியுள்ளதாக ஜியோ சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 ``நாட்டின் வடக்குப் பகுதிகளில் நடந்து வரும் விவசாயிகள் எதிர்ப்பைப் பயன்படுத்தி எம்.என்.பி போர்ட் இணைப்புகளை பெற தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் 'நெறிமுறையற்ற நடைமுறைகள்' மற்றும் 'நேர்மையற்ற மீறல்கள்' ஆகியவற்றை செய்து வருகின்றன.

 வேளாண் சட்டங்களை எங்கள் நிறுவனம் ஆதரிப்பதாக பரவி வரும் வதந்திகளை நேரடியாகவும் மறைமுகமாகவும், பண நன்மைகளுக்காக ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர்கள், முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் இந்த தீய மற்றும் பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 ஜியோ மொபைல் எண்களை தங்கள் நெட்வொர்க்குகளுக்கு மாற்றுவது விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர்கள் பொதுமக்களைத் தூண்டுகிறார்கள். இந்த பிரசாரம் வட மாநிலங்களில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரவி வருகிறது. மகாராஷ்டிரா போன்ற நாட்டின் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்சாரங்கள் உள்ளன.

 இந்த விளம்பரங்களும் திரைக்குப் பின்னால் நேர்மையற்ற அவதூறு பிரச்சாரங்களும் தொலைத்தொடர்பு விதிகளுக்கு எதிரானது. இதுபோன்ற நெறிமுறையற்ற நடைமுறைகள் மற்றும் நேர்மையற்ற மீறல்களுக்காக இந்த நிறுவனங்கள் மீது எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அத்தகைய பிரச்சாரங்களை உடனடியாக கட்டுப்படுத்தவும் வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com