டெல்லி: ஹரியானா போலீசார் ரப்பர் குண்டால் சுட்டதில் இளம் விவசாயி பலி? வலுக்கும் கண்டனம்; நடந்ததுஎன்ன?

பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போலீசார் மற்றும் விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், போலீஸ் இந்தத் தகவலை மறுத்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்ட்விட்டர்
Published on

ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள்:

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். முன்னதாக, விவசாயச் சங்கத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையே 4 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தச் சுமுகமும் ஏற்படவில்லை. இதையடுத்து, விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி முன்னேறும் வகையில் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று (பிப்.21) ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் ஷம்பு எல்லைக்குக் கொண்டுவந்ததால் பதற்றம் உருவாகியது.

24 வயதான இளைஞர் உயிரிழப்பு

அதாவது, ஹரியானா காவல்துறையால் போடப்பட்ட தடைகளை உடைக்க விவசாயிகள் முடிவு செய்ததால், கானௌரி எல்லை மற்றும் ஷம்பு எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. எனினும், ஷம்பு எல்லையில் தடுப்புகளை உருவாக்கி அவர்களை உள்ளேவிடாதவண்ணம் காவல்துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைத்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கானௌரி எல்லையில் ஹரியானா காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சுப் கரண் சிங் எனக் கண்டுகொள்ளப்பட்ட அந்த விவசாயி, காயம் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக விவசாயி தலைவர் சர்வான் பந்தேர் தெரிவித்துள்ளார்.

போலீசார் துப்பாக்கிச்சூட்டில் விவசாயி பலி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு;

விவசாயியின் மரணத்திற்கு பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசை, காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. அமைதியாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையினரிடன் நடவடிக்கை காரணமாக இளம் விவசாயி உயிரிழந்துவிட்டதாகவும், இதற்கு நீதி வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலும் இதனை கடுமையாக கண்டித்துள்ளார்.

ஹரியானா போலீஸ் மறுப்பு!

ஆனால் ஹரியானா காவல்துறை இதுவரை எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை. ஷம்பு எல்லையில் இன்று நடைபெற்ற மோதலில் இதுவரை எந்த விவசாயியும் இறக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள பதிவில், "இது வெறும் வதந்தி. டேட்டா சிங்-கனௌரி எல்லையில் இரண்டு போலீசார் மற்றும் ஒரு விவசாயி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்" என ஹரியானா காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அதேநேரத்தில், ஹரியானா காவல்துறையில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மூன்று காவல்துறை ஊழியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர் எனவும், இன்று விவசாயிகள் தாக்கியதில் 12 போலீஸார் காயமடைந்திருப்பதாகவும் ஜிந்த் எஸ்பி சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள் வைத்த ஹரியானா போலீஸ்

மேலும், ’ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திர உரிமையாளர்கள் அந்த இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ’அவை பாதுகாப்புப் படையினருக்கு தீங்கு விளைவிக்கும். தவிர, இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். இதனால் நீங்களும் அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம்’ என ஹரியானா காவல்துறை ட்வீட் செய்துள்ளது. முன்னதாக, விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லிக்கு செல்ல முடியாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

5வது சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இதற்கிடையே விவசாயச் சங்கங்களிடம் பேசுவதற்கு, 5வது சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக, கடந்த பிப்.18ஆம் தேதி நடைபெற்ற 4வது சுற்று பேச்சுவார்த்தையில் ஐந்து ஆண்டுகளுக்கு அரசு நிறுவனங்களால் பருப்பு, மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை கொள்முதல் செய்ய மூன்று மத்திய அமைச்சர்கள் குழு முன்மொழிந்தது. ஆனால், அதை விவசாயிகள் நிராகரித்தனர். அதன்பிறகே மீண்டும் இன்று போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com